Friday, November 30, 2007

நீ நான் மற்றும் காதல்-5

  • நீ போகும் பாதைவேண்டாமென
    வேறு பாதை சென்றேன்
    மனமின்றி !!
    திரும்பிப் பார்த்தால்
    உன் பின்னே போய்க் கொண்டிருந்தது என் மனம்
    நானின்றி...!!

  • பூட்டு மேல் பூட்டு போட்டு பூட்டினாலும்
    என் இதயம் தாண்டி
    உன் இதயம் சேரும்
    காதலிடம் கேட்டேன்
    "எங்கே அந்த கள்ளச்சாவி ?"
    காதல் சொன்னது
    "அதனிடம்தான் வந்திருக்கிறேன் ! "

Wednesday, September 5, 2007

நீ நான் மற்றும் காதல்-4

  • அதெப்படி ?
    காதல் தோட்டத்தில் மட்டும்
    ரோஜாக்கள் குத்தி
    முட்கள் காயப்படுகின்றன?


  • இசைவே இல்லையென்றாலும்
    இரைச்சலான இசையை
    இரு கை தட்டி ரசிக்கின்றேன்...
    வணக்கம் கூட சொல்லாத நண்பனிடம்
    வலியச் சென்று பேசி
    வருத்தம் போகச் சிரிக்கின்றேன்..
    பிடிக்காத புத்தகங்களைக் கூட
    தேடிப்பிடித்து
    பக்கம் விடாமல் படிக்கின்றேன்..
    ஆனாலும்
    மூளையின் மூலையில்
    காதலின் காலடி ஓசை
    கேட்டுக் கொண்டே இருக்கிறது..!


  • இப்போதெல்லாம்
    நம் உரையாடலின் நடுவில்
    வந்தமரும் நீண்ட மௌனத்தின்
    கனம் தாங்காமல்
    ஊனமாகிப் போகிறேன்...!



  • நெருங்கினால் சுடுகிறது..
    விலகினால் குளிர்கிறது....
    தீயும் நீயும் ஒன்றா?

  • இருப்பதையெல்லாம்

    கொள்ளையடித்த பிறகும்

    இயல்பாய் சிரிக்க

    எப்படி முடிகிறது உன்னால்?

Saturday, August 25, 2007

நீ நான் மற்றும் காதல்-3

  • ஒரே எழுத்தில்
    கவிதை கேட்டாய்..
    சொன்னேன்..
    "நீ"

  • அன்பைச் சொல்ல
    புன்னகை ஒரு வழி...
    உனக்கு மட்டும் மொழி..!

  • வார்த்தைகளைக் கோர்த்துத் தருகிறேன்...
    உன் வாசிப்பில்
    கவிதையாக்கி விடுகிறாய்...!

  • ஜன்னலோர ரயில்பயணம்
    மழைக்கால தேநீர்
    பெளர்ணமி இரவில் கடற்கரை
    மார்கழி காலையில் கோவில்
    சிலுசிலு காற்றில் மொட்டைமாடி
    மழை நின்ற இரவில் சிறுநடை
    பின்னிரவில் பழையபாடல்
    நீண்டபயணத்தில் சுகமான இசை
    இவை எதையுமே ரசிக்க முடியவில்லை
    அருகில் நீ இல்லாமல்..!

Wednesday, August 8, 2007

நீ நான் மற்றும் காதல்-2

  • உன்னைச் சந்திக்க வரும் வழியில்

    பூ வாங்கிக் கொள்ளலாம் என கிளம்பினேன்

    ஆனால் வரும் வழியெல்லாம் பூக்கள்..!

    எதைப் பறிப்பது..?


  • காயங்கள் தருகிறாய்-அதற்கு

    நியாயங்களும் சொல்கிறாய்...

    ரணப்படுத்துகிறாய்-நீயே

    குணப்படுத்துகிறாய்..

    வலி தருகிறாய்-தீர

    வழி சொல்கிறாய்--கேட்டால்

    முள்ளும் மலரும் ஒரே செடியில் என்று சிரிக்கறாய்...!



  • "உன்னோடு பேசமாட்டேன்"

    என்று சொல்லிவிட்டு

    தாமதமாய் வந்ததற்கு காரணம் கேட்கிறாய்..

    தீர்ப்பைச் சொல்லிவிட்டு

    விசாரணையைத் துவக்குகிறாய்...

    எங்கு நடக்கும் இந்த விசித்திர வழக்கு..?


  • என் வாழ்ககை ஒரு பாதை

    அதில் நீ மட்டும்தான் பயணி..!

    நீ மட்டுமே பயணி..!


  • "நீ யாரையாவது காதலிக்கிறியா?"

    "ஆமாம்..."

    "யாரு..?"

    "சொல்ல மாட்டேன்..."

    நீதான் அது

    என்று பின்னொரு நாளில் வெட்கத்தோடு

    சொல்வாயென கற்பனை செய்கிறது

    பாழாய் போன மனம்..!


  • "நீ யாரையாவது காதலிக்கிறியா?"

    "ம்கூம்..!"

    நீ?”

    "ச்சே ...ச்சே ..."

    குறும்பாய் புன்னகைத்தது நம் காதல்..!

Sunday, August 5, 2007

நீ நான் மற்றும் காதல்-1

  • நீ பேசினால் மயங்குகிறேன் ....!

    குரலை மயிலிறாகால்

    தடவி அனுப்புகிறாயோ?


  • நூறு வார்த்தைகள் பேச வந்தவன்

    வேறு வார்த்தைகள் பேசினேன்...

    வார்த்தைகளா முக்கியம்..?


  • விழியின் வழியே

    வெளியில் வழிகிறது

    தளும்பித் தளும்பிக்

    காதல்..!!


  • உன் இரு விழிநீரைத் துடைக்கும்

    ஒரு விரல்

    எனதாக வேண்டும்

    அன்பே..அன்பே..!

நீ நான் மற்றும் காதல்..!

  • பல வருடங்களாக

    நான் எழுதாத காரணம்

    இன்றுதான் தெரிந்தது

    உன்னைக் கண்டுபிடிக்க இவ்வளவு வருடங்களானது

    என் கவிதைக்கு…!


  • கவிதை பிடிக்குமா உங்களுக்கு

    என்று கேட்கிறாய்…..

    உன்னைப் பிடிக்காமல் போகுமா கண்ணே …!

  • இனிமேலும் உன்னைப் பற்றி

    நான் கவிதை எழுதாவிடில்

    தமிழ்

    இனி மெல்லச் சாகும்..!


இணையத்தில் காதல்


  • கணிப்"பொறி"க்குள்

    நீ வைத்த தேங்காய்காய் துண்டுதான்

    உன் மின்னஞ்சல்….

    விரும்பி நுழையும் எலியாய் நான்..!


  • "மயிலே"

    என்றழைக்கலாம் என்றால் பார்த்ததில்லை…..

    "குயிலே"

    என்றழைக்கலாம் என்றால் பேசியதுமில்லை….

    பின்பு எப்படித்தான் அழைப்பது....?

    "மெயிலே"

    என்றழைத்தால் கோபிக்க மாட்டாயே….?

  • அன்புக்கும் காமத்திற்கும் இடைப்பட்ட புள்ளியில்தான்

    பூக்கிறது காதல் என்றார் வைரமுத்து….

    அடடா….

    அவருக்குத் தெரியாமல் போய் விட்டதே...!

    உன் கணிணிக்கும்

    என் கணிணிக்கும்

    இடையில் கூட அது பூக்கலாம் என்று...!

  • என் கெஞ்சல்

    என் கொஞ்சல்

    எல்லாமே

    மின்னஞ்சலோடு முடிந்து விடுமோ....?


  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..?

    உண்டே...!

    என் GMAIL PASSWORD...!!


  • எல்லா மின்னஞ்சல்களிலும்

    ATTACHMENT இருப்பதில்லை….

    ஆனால் என் எல்லா மின்னஞ்சல்களிலும்

    ஒரு "ATTACHMENT" இருப்பதை கவனித்தாயா..?


  • உரையாடல் அறையில் உரையாடல்..!

    எப்போது

    அறையில் உரையாடல்..?


  • பத்து விரல்களும்

    பித்து பிடித்தது போல் ஆகி விட்டன

    சீக்கரம் வா...

    பேச வேண்டும்…!


  • மனதிலிருக்கும் வார்த்தைகள்

    எப்படியோ வழிதேடி

    விரல் நுனிவரை

    வந்து விடுகின்றன….


  • என் விரல்களுக்கு மட்டும்

    நீ முதலில் பரிச்சயமாகி விட்டாயென்று

    என் விழிகள்

    என்னோடு சண்டையிடுகின்றன….

    அவற்றிற்கும் ஒரு வாய்ப்பு கொடேன்..

  • வலையில் இருக்கிறேன்….

    பிறகு பேசலாம் என்றேன்..!

    நண்பன் கேட்டான்

    யார் வலையில்?


  • வலைக்குள் நீ வந்தாலே

    எளிதாய் அறிகிறேன்….

    என் அறைக்குள் குளிர் அதிகமாகிறதே...!


  • நீ விடைபெறும் ஒவ்வொரு முறையும்

    மரத்தின் கிளையில்

    கடைசி இழையில்

    தொங்கும் இலையின் நிலையில் நான்..!!

  • உன் விரல்களின்

    விசாரிப்பு போதும்

    விழிகளால் எப்போது?

  • மின்னஞ்சல்

    என்ற பெயர் சரிதான்..

    உன் அஞ்சல் படிக்கும்போதே

    மின்சாரம் பாய்கிறதே..!


  • பேராசைதான் ஒப்புக்கொள்கிறேன்….

    வருகிற மின்னஞ்சல் எல்லாம்

    உன்அஞ்சலாக இருக்கக்கூடாதா..?

Saturday, August 4, 2007

*உண்மை*

அரசன் அன்று கொல்வான்

தெய்வம் நின்று கொல்லும்

அது சரி ...

சாவது மக்கள்தானே?

*எய்டஸ்*

நினைக்க மறக்காதீர்கள் மனிதர்களே..!

எயட்ஸ் என்பதன் பொருள்

முன்பதிவு செய்யப்பட்ட மரணம்..!

சலவை செய்ய முடியாத அழுக்கு..!

மறக்க நினைக்காதீர்கள் மானிடர்களே..!

முறையும் உறையும் அற்ற உறவு மலர்ந்தால்-அங்கே

எயட்ஸின் விலாசம் விசாலமாகிறது.!

உணர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே...

நாம் நெருப்பு...!

எச்சில் துப்பியா நம்மை அணைப்பது?

மோகத்தின் தாகத்திற்கு

தேகத்தையா குடிக்கக் கொடுப்பது..?

மனதை மலர்த்தி விடுங்கள் மக்களே..!

ஆற்று நீர் அழுக்கு என்பதற்காக

சமுத்திரம் அதன் சங்கமத்தை மறுப்பதில்லை..

நாம் ஒதுக்க வேண்டியது எய்ஸைதானே தவிர

அதை சுமக்கும் மனிதர்களை அல்ல..!

இதயத்தில் இருப்பு வையுங்கள் இந்தியர்களே..!

ஒழுக்கத்தின் உறைவிடத்தில்

எய்ட்ஸ் ஒட்டடை படிவதில்லை...!

எய்டஸின் விரல்கள் தீண்டாதிருக்க

உணர்ச்சியின் நகங்களை வெட்டி வெயுங்கள்..!

ஏனெனில்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கணிதத்தில்தான்

மனிதத்தின் புனிதம் பூக்கிறது..!!