Thursday, June 5, 2008

காந்தியம்

ஆட்டுப்பால் குடி
என்கிறார் கரம்சந்த் காந்தி..
ஆட்டிடம் அனுமதி வாங்கு
என்கிறார் மேனகா காந்தி...

Friday, November 30, 2007

நீ நான் மற்றும் காதல்-5

  • நீ போகும் பாதைவேண்டாமென
    வேறு பாதை சென்றேன்
    மனமின்றி !!
    திரும்பிப் பார்த்தால்
    உன் பின்னே போய்க் கொண்டிருந்தது என் மனம்
    நானின்றி...!!

  • பூட்டு மேல் பூட்டு போட்டு பூட்டினாலும்
    என் இதயம் தாண்டி
    உன் இதயம் சேரும்
    காதலிடம் கேட்டேன்
    "எங்கே அந்த கள்ளச்சாவி ?"
    காதல் சொன்னது
    "அதனிடம்தான் வந்திருக்கிறேன் ! "

Wednesday, September 5, 2007

நீ நான் மற்றும் காதல்-4

  • அதெப்படி ?
    காதல் தோட்டத்தில் மட்டும்
    ரோஜாக்கள் குத்தி
    முட்கள் காயப்படுகின்றன?


  • இசைவே இல்லையென்றாலும்
    இரைச்சலான இசையை
    இரு கை தட்டி ரசிக்கின்றேன்...
    வணக்கம் கூட சொல்லாத நண்பனிடம்
    வலியச் சென்று பேசி
    வருத்தம் போகச் சிரிக்கின்றேன்..
    பிடிக்காத புத்தகங்களைக் கூட
    தேடிப்பிடித்து
    பக்கம் விடாமல் படிக்கின்றேன்..
    ஆனாலும்
    மூளையின் மூலையில்
    காதலின் காலடி ஓசை
    கேட்டுக் கொண்டே இருக்கிறது..!


  • இப்போதெல்லாம்
    நம் உரையாடலின் நடுவில்
    வந்தமரும் நீண்ட மௌனத்தின்
    கனம் தாங்காமல்
    ஊனமாகிப் போகிறேன்...!



  • நெருங்கினால் சுடுகிறது..
    விலகினால் குளிர்கிறது....
    தீயும் நீயும் ஒன்றா?

  • இருப்பதையெல்லாம்

    கொள்ளையடித்த பிறகும்

    இயல்பாய் சிரிக்க

    எப்படி முடிகிறது உன்னால்?

Saturday, August 25, 2007

நீ நான் மற்றும் காதல்-3

  • ஒரே எழுத்தில்
    கவிதை கேட்டாய்..
    சொன்னேன்..
    "நீ"

  • அன்பைச் சொல்ல
    புன்னகை ஒரு வழி...
    உனக்கு மட்டும் மொழி..!

  • வார்த்தைகளைக் கோர்த்துத் தருகிறேன்...
    உன் வாசிப்பில்
    கவிதையாக்கி விடுகிறாய்...!

  • ஜன்னலோர ரயில்பயணம்
    மழைக்கால தேநீர்
    பெளர்ணமி இரவில் கடற்கரை
    மார்கழி காலையில் கோவில்
    சிலுசிலு காற்றில் மொட்டைமாடி
    மழை நின்ற இரவில் சிறுநடை
    பின்னிரவில் பழையபாடல்
    நீண்டபயணத்தில் சுகமான இசை
    இவை எதையுமே ரசிக்க முடியவில்லை
    அருகில் நீ இல்லாமல்..!

Wednesday, August 8, 2007

நீ நான் மற்றும் காதல்-2

  • உன்னைச் சந்திக்க வரும் வழியில்

    பூ வாங்கிக் கொள்ளலாம் என கிளம்பினேன்

    ஆனால் வரும் வழியெல்லாம் பூக்கள்..!

    எதைப் பறிப்பது..?


  • காயங்கள் தருகிறாய்-அதற்கு

    நியாயங்களும் சொல்கிறாய்...

    ரணப்படுத்துகிறாய்-நீயே

    குணப்படுத்துகிறாய்..

    வலி தருகிறாய்-தீர

    வழி சொல்கிறாய்--கேட்டால்

    முள்ளும் மலரும் ஒரே செடியில் என்று சிரிக்கறாய்...!



  • "உன்னோடு பேசமாட்டேன்"

    என்று சொல்லிவிட்டு

    தாமதமாய் வந்ததற்கு காரணம் கேட்கிறாய்..

    தீர்ப்பைச் சொல்லிவிட்டு

    விசாரணையைத் துவக்குகிறாய்...

    எங்கு நடக்கும் இந்த விசித்திர வழக்கு..?


  • என் வாழ்ககை ஒரு பாதை

    அதில் நீ மட்டும்தான் பயணி..!

    நீ மட்டுமே பயணி..!


  • "நீ யாரையாவது காதலிக்கிறியா?"

    "ஆமாம்..."

    "யாரு..?"

    "சொல்ல மாட்டேன்..."

    நீதான் அது

    என்று பின்னொரு நாளில் வெட்கத்தோடு

    சொல்வாயென கற்பனை செய்கிறது

    பாழாய் போன மனம்..!


  • "நீ யாரையாவது காதலிக்கிறியா?"

    "ம்கூம்..!"

    நீ?”

    "ச்சே ...ச்சே ..."

    குறும்பாய் புன்னகைத்தது நம் காதல்..!

Sunday, August 5, 2007

நீ நான் மற்றும் காதல்-1

  • நீ பேசினால் மயங்குகிறேன் ....!

    குரலை மயிலிறாகால்

    தடவி அனுப்புகிறாயோ?


  • நூறு வார்த்தைகள் பேச வந்தவன்

    வேறு வார்த்தைகள் பேசினேன்...

    வார்த்தைகளா முக்கியம்..?


  • விழியின் வழியே

    வெளியில் வழிகிறது

    தளும்பித் தளும்பிக்

    காதல்..!!


  • உன் இரு விழிநீரைத் துடைக்கும்

    ஒரு விரல்

    எனதாக வேண்டும்

    அன்பே..அன்பே..!

நீ நான் மற்றும் காதல்..!

  • பல வருடங்களாக

    நான் எழுதாத காரணம்

    இன்றுதான் தெரிந்தது

    உன்னைக் கண்டுபிடிக்க இவ்வளவு வருடங்களானது

    என் கவிதைக்கு…!


  • கவிதை பிடிக்குமா உங்களுக்கு

    என்று கேட்கிறாய்…..

    உன்னைப் பிடிக்காமல் போகுமா கண்ணே …!

  • இனிமேலும் உன்னைப் பற்றி

    நான் கவிதை எழுதாவிடில்

    தமிழ்

    இனி மெல்லச் சாகும்..!